23 Sep கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு சில்லறை விலை அவசியம்! – டாக்டர் சத்ய பிரகாஷ்
ரவாங், செப் 22: தனியார் மருத்துவ நிலையங்களில் விற்கப்படவிருக்கும் கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு சில்லறை விலையை அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும் என எஸ்.பி.கேர் கிளினிக் நிர்வாகி டாக்டர் சத்ய பிரகாஷ் கருத்து தெரிவித்து உள்ளார்.
தனியார் மருத்துவ நிலையங்கள் சில கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு விதித்திருக்கும் விலை மிக அதிகம் எனவும் இது வருமானம் குறைந்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு மிகப் பெரிய சுமையாக அமையும் என டாக்டர் சத்ய பிரகாஷ் தெரிவித்தார்.
முகக்கவரி , கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகள் போன்றவை போலவே தனியார் மருத்துவ நிலைய கோவிட்-19 தடுப்பூசி விற்பனைக்கும் சில்லறை விலை நிர்ணயம் மிகவும் அவசியமானது. இதை அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த செப்டெம்பர் 16 – தேதி முதல் 30 ஆம் தேதி வரை முன் பதிவில்லாமல் நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 5 தடுப்பூசி மையங்களில் எஸ்.பி.கேர் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சினோவேக் 2’ தடுப்பூசிகள் 300 வெள்ளிக்கு வழங்கப்படுவதாகவும், அதனை 360 வெள்ளி வரை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வருமானம் குறைவாகப் பெறும் தரப்பினருக்கு அந்த விலை சாத்தியப்படாது என்பதால், அந்த வாய்பினைத் தமது கிளினிக் வேண்டாம் என மறுத்துவிட்டதாகவும், தனியார் மருத்துவ நிலையங்களில் விற்கப்பட இருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு அரசாங்கம் சில்லறை விலையை விரைந்து முடிவு செய்யவேண்டும் என்றும் டாக்டர் சத்ய பிரகாஷ் கேட்டுக்கொண்டார்.
இருந்து ஆதாரம்: http://www.tamillens.com/single_news/2654#